திருமங்கலம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம்

திருமங்கலம், ஜூன்.11: திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.
முதல்நாளான நேற்று பி.எஸ்சி கணிதம் மற்றும் பி.ஏ ஆங்கிலம் ஆகிய இரண்டு துறை பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் லட்சுமி, கணிதவியல் துறை பேராசிரியர் ஹரிநாராயணன், வணிகவியல் கெளரவ விரிவுரையாளர் சின்னசாமி, தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் சுமதி ஆகியோர் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை சரி பார்த்து கலந்தாய்வினை நடத்தினர். அடுத்தகட்டமாக இன்று (ஜூன் 11) பி.காம் பாடத்திற்கும், நாளை பி.ஏ தமிழ் பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிசான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் நன்நடத்தை சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வரவேண்டும் என, கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் துறையில் 120 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் 60 மாணவ, மாணவிகளும் சேலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருமங்கலம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: