கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதி வயல்களில் நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள் விவசாயிகள் கவலை

பாபநாசம், அக். 16: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே மணலூர், வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம், சோமேஸ்வரபுரம், பட்டுக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை பயிரிட்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள வயல்களில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் விளைந்துள்ள கரும்புகளை சேதப்படுத்துகின்றனர். வாழைக்கன்றை சாய்த்து விடுகிறது. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை நாசம் செய்து விடுகிறது. எனவே பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

இதுகுறித்து மணலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயந்தி பாஸ்கர் கூறுகையில், காட்டு பன்றிகள் எங்கிருந்து வருகின்றதென்று தெரியவில்லை. இரவு நேரங்களில் பன்றிகளின் தொல்லை எல்லை மீறி சென்றுவிட்டது. எங்கள் பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் வாழை, கரும்பு, நெல் பயிரிட்டுள்ளோம். விதை நாற்றாங்காலை காட்டு பன்றிகள் சேதப்படுத்துகிறது. குறுவை வயலில் அறுவடை தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு வயலில் காவல் காக்க வேண்டியுள்ளது. எனவே காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். கூலி ஆட்களின் தட்டுப்பாடு, உர விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே விவசாயத்தை மேற்கொண்டுள்ள எங்களுக்கு ஒருபக்கம் குரங்குகளால் தொல்லை, மறுபக்கம் காட்டு பன்றிகளால் தொல்லை என்றார்.

Related Stories: