மாவட்ட அளவில் காய்ச்சல் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை

காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் மாவட்ட அளவிலான காய்ச்சல் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடந்தது.

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவின்படி எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவிலான காய்ச்சல் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு தடுப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அப்போது, கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட வட்டாரங்களான குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், புனிததோமையார் மலை, திருப்போரூர், காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே 50 தற்காலிக கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் உள்ளனர். மேலும், 50 தற்காலிக கொசுப்புழு பணியாளர்களை நியமித்து ஒரு வட்டாரத்தில் 100 கொசுப்புழு பணியாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டு, நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 101 போ், செங்கல்பட்டில் 151 பேர் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து, நலமுடன் வீடு திரும்பியுள்ளனர் என்றார்.

மேலும், மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் கொசுப்புழு தடுப்பு பணிகள், புகை மருந்து அடிக்கும் பணிகள், குளோரினேசன் செய்யும் பணி, தேவையற்ற பொருட்களை வீடு வீடாக சென்று சோதனை செய்யும்ம் பணிகளை செய்து, காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர்கள் செந்தில்குமார், பழனி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: