மக்கள் மகிழ்ச்சி பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800 மரக்கன்றுகள் நடும் விழா

பட்டுக்கோட்டை, அக். 15: கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி ஏற்பட்ட கஜா புயல் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே புரட்டி போட்டது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. பட்டுக்கோட்டை அடுத்த பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதையறிந்த பட்டுக்கோட்டை கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசு பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தனர். அப்போது தான் பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்தனர். அதைதொடர்ந்து ஒரு மாணவருக்கு ஒரு மரக்கன்று என்ற திட்ட துவக்க விழா, ஆழ்குழாய் கிணறு ஒப்படைக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் மாணவருக்கு ஒரு மரக்கன்று என்ற வீதம் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஆளுநர் மணிமாறன் ஆழ்குழாய் கிணற்றை (போர்வெல்) பள்ளிக்கு ஒப்படைத்தார். உதவி தலைமையாசிரியை கோமதி நன்றி கூறினார்.

விழாவில் பள்ளியில் பயிலும் 800 மாணவர்களுக்கும் வேம்பு, புங்கை, தேக்கு, ரோஸ்வுட் உள்பட 17 வகையான 800 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அந்த மரக்கன்றுகள் அனைத்தும் அந்த பள்ளி வளாகத்திலேயே நடப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த மரக்கன்றுகளை ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் படிக்கும் காலம் வரை தாங்களே தினசரி தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் முடிவு செய்து அதற்காக உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

Related Stories: