கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதைத்த சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வு

திருப்பரங்குன்றம், அக்.15: திருநகர் அமைதிச்சோலையில் உள்ள வீட்டின் முன்பு புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டி ஆய்வுக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்தவர் நாராயணன் மகள் ரேவதி. இவருக்கும் திருநகர் அமைதிச்சோலையை சேர்ந்த கார்த்திக்ராஜா இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் அமைதிச்சோலையில் உள்ள கார்த்திக்ராஜாவின் வீட்டில் வசித்து வந்தனர். ரேவதி திருமணமான பின்னரும் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி கார்ப்பமானதை தொடர்ந்து தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென வயிற்று வலி காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய கரு கலைந்துள்ளது. இறந்த சிசுவை அமைதிச்சோலையில் உள்ள கார்த்திக்ராஜாவின் வீட்டில் புதைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சில நாட்களில் (கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி) ரேவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போதே ரேவதி தற்கொலைக்கும் ரேவதி வயிற்றில் இருந்த ஆண் சிசு கருக்கலைப்பிற்கும் ஹார்விபட்டியைச் சேர்ந்த அருண்(26) என்பவர் தான் காரணம் என அவருடைய குடும்பத்தினர் கூறி வந்தனர். இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் ரேவதியின் தந்தை நாராயணன் மனு அளித்தார். இதனைதொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருநகர் போலீசார் அருண் மீது ஆசை வார்த்தை கூறி ரேவதியின் வயிற்றில் இருந்த சிசுவை கருக்கலைப்பு மாத்திரையின் மூலம் கருக்கலைப்பு செய்ததாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் சிசுவை தேண்டி எடுத்தனர். அதில் ஒரே ஒரு எலும்பு மட்டுமே கிடைத்தது. அதை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தெடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு பின்னர் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: