குடிமராமத்து கண்மாயில் மணல் கடத்தல்

மதுரை, அக். 10: வாலாந்தூரில் குடிமராமத்து பணி நடக்கும் கண்மாயில் இருந்து மணல் கடத்தலை தடுக்க கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.   தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில்,  உசிலம்பட்டி கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி மொக்கமாயன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜிடம் கொடுத்த மனுவில், ‘உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் தற்போது குடிமராமத்து பணி நடந்து வருகிறது. இக்கண்மாயில் மணல் அதிகளவில் உள்ளது. இதனை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், இந்த மணலை இரவு பகல் என பாராமல் லாரிகளில் அள்ளி சென்று பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த முறைகேட்டை உடனே மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக உசிலம்பட்டி ஆர்டிஓ விசாரிக்க டிஆர்ஓ பரிந்துரை செய்தார்.

Related Stories: