தென்தாமரைகுளம் அருகே குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

தென்தாமரைகுளம். அக். 10: தென்தாமரைகுளம்  அருகிலுள்ள வடக்கு கரும்பாட்டூரை சேர்ந்தவர் சுரேஷ் (47) கட்டிட  தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  நேற்று முன்தினம் காலை கரும்பாட்டூர் குளத்தின் அருகிலுள்ள  ஊராட்சிக்கு சொந்தமான  குடிநீர் கிணற்றின் அருகில் சென்ற சுரேஷ் அந்த   கிணற்றின் திண்டில் இருக்க முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி 30 அடி  ஆழமுள்ள  கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றுக்குள் நீர் இருந்ததால்  நீரில்  தத்தளித்தபடி  சுரேஷ் சத்தம்போட்டு அலறி உள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு கிணற்றின் மறுபக்கத்தில் வாத்து, கோழிகள்  மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் ஓடிவந்து கிணற்றிற்குள் பார்த்துவிட்டு  ஊருக்குள் சென்று அப்பகுதி மக்களை அழைத்து வந்துள்ளார். அவர்கள் உடனடியாக  கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு  நிலைய அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து ஒரு பெரியகூடையை கயிற்றில் கட்டி  கிணற்றுக்குள்  இறக்கி சுரேசை பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த சுரேசுக்கு  காலில் காயம் பட்டது. எனவே தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சுரேசை  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பிவைத்தனர்.  கிணற்றுக்குள் தொழிலாளி தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: