திருமங்கலம், மேலூரில் பலத்த மழைக்கு இடிந்து விழுந்த வீடுகள்

திருமங்கலம்/மேலூர், செப். 26: திருமங்கலம் மற்றும் மேலூரில் பலத்த மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில், மேலூரில் வீட்டில் தூங்கியவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில், மந்தையம்மன் கோயில் அருகே, தேடாசெல்வி (40) என்பவரது வீடு பலத்த மழைக்கு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் தோட்டத்து வீட்டிற்கு சென்றிருந்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. சேதம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வடகரை தரைபாலம், மேலக்கோட்டை ரயில்வே தரைபாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலூரில் இடிந்து விழுந்த வீடு: மேலூர்-மதுரை மெயின் ரோட்டில் உள்ள கருத்தபுளியம்பட்டியைச் சேர்ந்த விஜயராகவன் (44), தனது மனைவி சுரேகா மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் ஓட்டுவீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பெய்த மழையால், இவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த விஜயராகவன் குடும்பத்தினர் தப்பினர். சுவர் மற்றும் ஓடுகள் இடிந்து விழுந்ததில், பொருட்கள் சேதமடைந்தன. நிவாரணம் வழங்கக்கோரி, தாசில்தாரிடம் விஜயராகவன் நேற்று மனு அளித்துள்ளார்.

Related Stories: