44 ஆண்டுகளாக சமையல் அறையில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகங்கள்

திருவள்ளூர், செப்.26: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமையல் அறையில், வட்டார கல்வி அலுவலகங்கள் போதிய வசதியின்றி இயங்கி வருகிறது. விபத்து ஏற்படும் முன் அகற்றி புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர், திருவாலங்காடு, திருவள்ளூர், திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, பூண்டி, எல்லாபுரம், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், சோழவரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றிய அலுவலக வளாகத்தில்தான் வட்டார கல்வி அலுவலகங்கள் உள்ளது.ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலகத்திலும், 2 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் உள்பட 13 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், ஆசிரியர்களின் பணி பதிவேடு, வருங்கால வைப்பு தொகை ஆகியவற்றை கவனிப்பது உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

இது அடிப்படை வசதிகள் இல்லாத சிறிய அறையில் செயல்படுகிறது. இந்த கட்டிடம் அனைத்தும் கடந்த 1975ம் ஆண்டு காமராஜர் முதல்வராகஇருந்தபோது மதிய உணவு திட்டத்தின் கீழ் சமையலறைக்காக கட்டப்பட்டது. அப்போது ஆசிரியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்தனர். 1981 ஜூனில், அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், ஆசிரியர்களை அரசு ஊழியராக அறிவித்தார். அதன்பின் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் வந்தனர்.

துவக்கத்தில், வாடகை கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.1984ல் மதிய உணவு திட்டத்தை ரத்து செய்து சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இதனால் ஒவ்வொரு ஒன்றிய அலுவலகத்திலும் இருந்த சமையல் கூடம் காலியானது. அந்த ஆண்டிலிருந்து சமையலறை கட்டிடத்தில், வட்டார கல்வி அலுவலகம் அனைத்து ஒன்றியங்களில் செயல்படுகிறது.தற்போது கட்டிடம் சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால் ஆவணங்கள், கம்ப்யூட்டர்களை பாதுகாக்க முடியவில்லை. திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்தூர் உள்பட பல ஒன்றியங்களில் இந்நிலையே காணப்படுகிறது.

தற்போது 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பராமரிப்பு இல்லாத அரசு கட்டிடங்களை மழைக்காலத்துக்கு முன்பே அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, விபத்து ஏற்படுமுன் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும், 44 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமையல் அறைகளை இடித்து அகற்றி, நவீன வசதிகளுடன் கூடிய உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை அரசு கட்டித்தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, வட்டார கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், காமராஜர் முதல்வராகஇருந்தபோது கட்டப்பட்ட, மதிய உணவு சமையல் அறையில்தான், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது.44 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கட்டிடங்கள், இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்படுவதற்குள் அகற்ற வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு கடிதமும் கடந்தாண்டே அனுப்பப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. இனியாவது கட்டிடத்தை அகற்றி, வட்டார கல்வி அலுவலகம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: