திருமயம், அரிமளம் பகுதியில் வரத்து வாரிகளை விரைந்து தூர்வார வேண்டும்

திருமயம், செப்.24: திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள வரத்து வாரிகளை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலவிய வறண்ட வானிலை காரணமாக வரத்து வாரிகளை பராமரிப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.இதனால் கால்வாயில் மண், பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதை பெரும்பாலும் காண முடிந்தது.இது ஒரு புறம் இருக்க சாலையோரம் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, நீண்ட நாட்களாக வடிய வாய்ப்பில்லாமல் தேங்கி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சாலையில் செல்பவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதோடு தேங்கி கிடக்கும் நீரில் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டிய மழை நீர் சாலையோர பள்ளங்கள், குடியிறுப்பு பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக வழியின்றி தேங்கி கிடக்கிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள வரத்து வாரிகளை தூர்வார உடனே நடவடிக்கை எடுப்பதோடு அதிகாரிகள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது பற்றி அரிமளம் பகுதி மக்கள் கூறுகையில்,கடந்த சில நாட்களாக அரிமளம், திருமயம் உள்ளிட்ட ஒருசில பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த ஒரு நாள் மழைக்கே அப்பகுதியில் உள்ள சாலை, கால்வாய்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. கால்வாயில் மழைநீர் போக வழியில்லாத நிலையில் சாலையில் மழைநீர் வௌ்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு வரத்து வாரிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளே காரணம்.எனவே அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் வரத்துவாரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதே சமயம் மாவட்டத்திலேயே திருமயம் பகுதியில் அதிகளவு மழை பதிவாகியுள்ள நிலையில் வரத்துவாரிகள் தூர் வாராததால் நீர் நிலைகள் நீறின்றி காணப்படுகிறது என்றனர்.

Related Stories: