கொடைக்கானல் மலைப்பாதையில் யானைகள் உலா வாகன ஓட்டிகள் உஷார்

பழநி, செப்.20:  யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழநி வனப்பகுதியில் யானைகள், கடமான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இதில் காட்டுயானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்லும். அவ்வாறு வரும் போது, அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசப்படுத்துகின்றன. தகவலறியும் வனத்துறையினரும் விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலாறு-பொருந்தலாறு அணை ஜீரோ பாயின்ட் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் தாங்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அப்பகுதி புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஜீரோ பாயிண்ட் பகுதியில் 4க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியிலும் யானைகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து இந்த யானைகள் வந்திருக்கலாம். எனவே, மலைப்பாதையில் இரவு நேரத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். அவை கடந்து சென்ற பிறகு வாகனத்தை எடுத்துச்செல்லலாம் என்றனர்.

Related Stories: