தனியார் கிளப்பில் காலை 6 மணி முதல் மது விற்பனை கொடைக்கானலில் 2 பேர் கைது

கொடைக்கானல், செப்.20:  கொடைக்கானலில் அனுமதியின்றி பார் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலையில் தனியார் கிளப் உள்ளது. இந்த கிளப்பில் அனுமதி பெற்ற மதுபான பாரும் உள்ளது. தமிழக அரசின் மது விலக்கு சட்டப்படி நண்பகல் 12 மணிக்கு மேல்தான் பார் நடத்த வேண்டும். ஆனால் இந்த மதுபான பார் காலை 6 மணி முதல் இருந்தே திறக்கப்பட்டு குடிமகன்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதுபற்றி பல்வேறு புகார்கள் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. கலால் துறைக்கும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து இந்த மதுபான பார் இஷ்டத்திற்கு செயல்பட்டு வந்தது. அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரையும் இந்த கிளப் நிர்வாகத்தினர் சரி கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று இந்த கிளப்பை கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் திடீரென்று சோதனை செய்தார். இதில் மதுவிலக்கு சட்டத்தை மீறி செயல்பட்டது மற்றும் சூதாட்டம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து மதுவிலக்கு சட்டத்தை மீறி கிளப்பை நடத்திவரும் சூசைராஜ் மற்றும் பழனி கருப்பசாமி மகன் ஜீவரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். இவர்களிடமிருந்து 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: