ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கடலில் பாலம் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், செப். 20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் அனல்மின் நிலைய வெப்பம் நிறைந்த கழிவுநீரை கடலில் விடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பின் சார்பாக படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூரில் சுமார் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல் மின் உலைகள் 1600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக பல கோடி ரூபாய் மதிப்பில் அதற்கான டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் மின் உற்பத்திக்கான மின் உளைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த அனல்மின் நிலையத்திற்கு கடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்திய தண்ணீரை குழாய்கள் மூலம் கடலில் விடப்போவதாக கூறப்படுகிறது. இதைத்தெரிந்து கொண்ட மீனவர்கள் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பம் நிறைந்த தண்ணீரை கடலில் விட்டால் அதனால் மீன் வளம் அழிவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் வெப்பம் நிறைந்த தண்ணீரை கடலுக்குள் விடக்கூடாது. பாலம் கட்டக்கூடாது எனக் கூறி கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர் முகம்மது உமர் பாரூக், செயலாளர் பாலன் பொருளாளர் அரிஹரன் ஆகியோர் தலைமையில் மோர்ப்பண்னை, திருப்பாலைக்குடி, காரங்காடு, புதுப்பட்டிணம் ,எம்.வி.பட்டிணம், சிங்காரவேலநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி கடலுக்குள் பாலம் கட்டும் பகுதிக்கு சென்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த திட்டம் அறிவித்த காலம் முதல் விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு வகையில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமே இருந்து வந்தது நிலம் கையகப்படுத்துவது சம்மந்தமாகவும், அனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சில விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர். அவையும் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்டு வருகின்ற அனல்மின் நிலையத்தில் இருந்து வெப்பம் நிறைந்த கழிவுநீரை கடலில் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், தண்ணீரை உறிஞ்சி உற்பத்திக்கு எடுப்பதற்கு ஏதுவாகவும் கரையில் இருந்து கடலில் சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு மேல் பாலம் கட்டப்பட உள்ளது என மீனவர்களுக்கு தெரிய வந்த நிலையில் கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்து முறையிட்டனர். இது சம்மந்தமாக கலெக்டர் மற்றும் மீனவர்கள், அனல்மின் நிலைய அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கடலில் பாலம் கட்டுவதால் எங்களின் தொழில் பாதிக்கும் என மீனவர்கள் சார்பாக தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகமும் மீனவர்கள் தொழில் பாதிக்காத வகையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன் தற்காலிகமாக பாலம் கட்டும் பணியை நிறுத்தி வைக்குமாறு அனல்மின் சிலைய நிர்வாகத்திற்க்கு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி பாலம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மீண்டும் பணி ஆரம்பிக்க உள்ளதாக தெரியவருவதாக கூறி திடீரென மீனவர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘அனல்மின் நிலையம் கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை கடலுக்குள் பாலம் கட்டக்கூடாது என்றும், அனல்மின் நிலைய சூடு நிறைந்த தண்ணீரை கொண்டு வந்து கடலில் விடக்கூடாது என்றுதான் கூறுகிறோம். காரணம் கடலில் பாலம் கட்டினால் எங்களுடைய மீன்பிடி படகுகளில் தொழிலுக்கு போவதற்கு இடையூறாக இருக்கும். அத்துடன் மீன்வளம் அழிந்துவிடும். அப்படி மீன்வளம் அழிந்து மீனவர்களாகிய எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பல முறை கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். சுதந்திர தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபா கூட்டத்தில் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தோம். அதனை அதிகாரிகள் ஏற்க முன்வராததால் கிராம சபை கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தோம். எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான். தமிழக அரசும், மாவட்ட நீர்வாகமும் மீனவர்களின் நலனில் அக்கரை கொண்டு கடலுக்குள் பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: