பெரும்பள்ளம் ஓடை ரூ.183.83 கோடியில் சீரமைக்க திட்டம்

ஈரோடு, செப். 20:  ஈரோடு பெரும்பள்ளம் ஓடை ரூ.183.83 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், பெரும்பள்ளம் ஓடை வழியாக ஈரோடு மாநகர பகுதிக்குள் வருகிறது. பின்னர், இந்த ஓடை காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது, பெரும்பள்ளம் ஓடையில் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் கலந்து பெரும்பள்ளம் ஓடை கழிவுநீர் ஓடையாக மாறி உள்ளது. பல இடங்களில் ஓடையில் புதர்மண்டி கிடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் அமைப்பினர் ஓடையை தூர்வாருவதாக கூறி பணிகளை துவக்கி முடிக்காமல் விட்டு விட்டனர். இதனால், தொடர்ந்து இந்த பெரும்பள்ளம் ஓடையில் கழிவுநீர், ஓட்டல், பேக்கரி, இறைச்சி கடைகளில் இருந்து வரும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதைத்தடுக்கும் வகையிலும், பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்க ரூ.183.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சீரமைப்பு பணி மேற்கொள்ள 6 பகுதியாக பிரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஓடையை தூர்வாரும் பணிகளை அடுத்த மாதம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனியார் அமைப்புடன் சேர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சேட்டிலைட் சர்வே பணிகள் நேற்று துவங்கியது. ஓடையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள், ஓடையின் அகலம், எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது போன்ற விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில்  சேட்டிலைட் சர்வே துவங்கி உள்ளது. இப் பணிகளை 15 நாட்களுக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் ஓடையை சீரமைக்கும் பணி துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரும்பள்ளம் ஓடையை தூர்வாரி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.183.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பள்ளம் ஓடை துவங்கும் கதிரம்பட்டி காரப்பாறையில் இருந்து ஈரோடு வெண்டிபாளையம் பீளமேடு பகுதியில் காவிரி ஆறு வரை 12 கி.மீட்டருக்கு ஓடை சீரமைக்கப்படுகிறது. ஓடை பகுதியில் 6.5 கி.மீட்டருக்கு நடைபாதையும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு, சிறு தடுப்பணைகளும், தேவையான இடங்களில் பூங்காவும் அமைக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளதால் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீர் குழாய்களும் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்படும்.

இதனால், ஓடையில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். பெரும்பள்ளம் ஓடை பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் ஆங்காங்கே துளையிட்டு தண்ணீர் நிலத்தில் இறங்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஓடையை ஒட்டி ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான வீடுகள் சித்தோடு அருகே நல்லாக்கவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கி தரப்படுகிறது. சேட்டிலைட் சர்வே பணிகள் முடிந்த பிறகு அடுத்த மாதம் ஓடையை சீரமைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: