கமுதி ஒன்றியத்தில் பயன்பாடின்றி விஏஓ.கள் கட்டிடம்

சாயல்குடி, செப்.19:  கமுதி தாலுகாவிலுள்ள கிராமங்களில் பயன்பாடின்றி விஏஓ அலுவலகம் பூட்டியே கிடப்பதால், விஏஓ.க்களை தேடி பொதுமக்கள் அலைந்து வருவதாக புகார் கூறுகின்றனர்.

கமுதி தாலுகாவில் உள்ள 5 வருவாய் பிர்க்காகள் இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது, அதில் கமுதி கிழக்கில் 8 வருவாய் குருப்களும், கமுதி மேற்கில் 10 வருவாய் குருப்களும், அபிராமத்தில் 12 வருவாய் குருப்களும், கோவிலாங்குளத்தில் 10 வருவாய் குருப்களும், பெருநாழியில் 9 வருவாய் குருப்களும் உள்ளன.

வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாத இடங்களுக்கு அருகிலிருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

இங்கு பெரும்பான்மையான கிராமநிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்து, அலுவலகம் நடத்துவதற்கு உகந்ததாக இல்லை. இதனால் விஏஓ.க்கள் அக்கட்டிடத்திற்கு வருவது கிடையாது. இதனால் கமுதியிலுள்ள தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு அலுவலகம் பிடித்து நடத்தி வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் விஏஓ கட்டிடங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கிறது.

இதனால் தேவையான சான்றுகள் பெறுவதற்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் விஏஓ.க்களை தேடி அலையும் நிலை உள்ளது.

இதுகுறித்து கமுதி பகுதி பொதுமக்கள் கூறும்போது, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றுகள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள், பட்டா சம்பந்தமான சான்றுகள், சிறு, குறு விவசாய சான்று உதவி தொகை பெற தேவையான சான்றுகள் உள்ளிட்ட அனைத்து விதமான சான்றுகளுக்கு விஏஓ.க்களின் பரிந்துரை மற்றும் சான்றுகள் தேவைப்படுகிறது.

ஆனால் கிராமங்களில் அரசு கட்டி கொடுத்த அலுவலகத்தில் விஏஓ.க்கள் இருப்பதில்லை. இதனால் நகர்புறங்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதியில்லாத நிலையில், அவசரம் கருதி ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் பணம் செலவழித்து செல்லும் நிலை உள்ளது. அங்கு சென்று விஏஓ.க்களை தேடி அலையும் நிலை உள்ளது. இதனால் பணம் விரயம், காலவிரயம், வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது என்கின்றனர்.

மேலும் கிராமத்திலுள்ள விஏஓ.க்கள் அலுவலகம் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. இதனை சமூக விரோதிகள் பல செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடத்தை சுற்றி குப்பைகள் நிறைந்து, புதர்மண்டி கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே கிராமங்களிலுள்ள விஏஓ அலுவலக கட்டிடத்தை மராமத்து செய்து, குடிநீர், கழிவறை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். விஏஓ.க்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: