வடகிழக்கு பருவமழை துவங்குவதால் அனைத்துதுறையிலும் 24 மணிநேரமும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் முன்னேற்பாடு ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சி, செப்.19: வரும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது:வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் வாரம் துவங்குவதையொட்டி ஒவ்வொரு துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும். பருவ மழை காலங்களில் அனைத்து துறையினரும் தங்களது அலுவலகங்களில் 24 மணிநேரமும் பொறுப்பான பணியாளர்கள் பணியாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அனைத்து கோட்டாட்சியர்களும் (ஆர்டிஓ), தாசில்தார்களும் புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பொது இடங்கள் நல்ல முறையில் உள்ளனவா என்பதை முன்கூட்டியே பார்வையிடல் வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர் தொட்டிகளில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சுகாதாரத்துறையினர் மருத்துவர்கள் குழு அமைத்திடவும், மருத்துவக் குழுக்கள் செல்ல தேவையான வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும் தேவையான அத்தியாவசியமான மருந்துகளை முன்கூட்டியே கையிருப்பில் வைக்கவும், தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவசரகால பிரிவு வாகன வசதிகளுடன் கூடிய மருத்துவக்குழு அமைத்து 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

மழைக்காலங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக தங்கவைப்பதற்கு ஏதுவாக பள்ளிக்கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் பள்ளி கட்டிடங்களில் உள்ள பழுதுகள் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கட்டிடங்களில் உள்ள பழுதுகளை சரிபார்க்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களை உடனடியாக அப்புறப்படுத்தி தங்க வைப்பதற்கு ஏதுவாக சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் கல்யாண மண்டபங்கள் ஆகியவை மின்வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றுடன் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். வெள்ளம் ஏற்படும் போது கரைகளில் முன்னர் உடைப்புகள் ஏற்பட்ட இடங்களை கண்காணித்து அவ்விடங்களுக்கு மணல் மூட்டைகள் உடனுக்குடன் அனுப்புவதற்கு ஏதுவாக போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்து சமய அறநியைத்துறையினர் பருவமழை காலங்களில் புயல் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களை அனைத்து கோயில்களிலும் தங்குவதற்கு தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தினர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தட்டுப்பாடு இன்றி கிடைத்திட தக்க மேல் நடவடிக்கைகளை ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

Related Stories: