கோதாவரி நதிநீர் மேலாண்மை திட்டங்களை பார்வையிட காவிரி டெல்டா விவசாயிகள் பயணம்

கும்பகோணம், செப்.19: கோதாவரி நதிநீர் மேலாண்மை திட்டங்களை பார்வையிட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நேற்று தெலங்கானா புறப்பட்டு சென்றனர். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த 31 ஆயிரம் ஏரி, குளங்களை மீட்டெடுத்து புனரமைப்பு கட்டமைப்பு பணிகளுக்கு என மகாராஜ் கக்கா தியா நீராதார திட்டத்துக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட தெலங்கானா மாநில நீர்வள ஆதார மேம்பாட்டு கழக தலைவர் பிரகாஷ் ராவ், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்பேரில் தெலங்கானா மாநிலத்தில் ரூ.80 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் உலகிலேயே மிகப்பெரிய பல அடுக்கு பயன்பாடுடைய நீர் மேலேற்று பாசன திட்டத்தின்கீழ் புதிதாக 41 லட்சம் ஏக்கர் பாசனம் பெறவும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் மிக பிரம்மாண்டமான திட்டமான காலேஸ்வரம் கதவணை திட்டத்தின் பணிகளை கோதாவரி நதிக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.

Advertising
Advertising

மேலும் தெலங்கானா மாநில நீர் மற்றும் நில ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஐதராபாத்தில் நடைபெறும் மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேச மழைநீரை பயன்படுத்தி நீர் மின்சக்தி உற்பத்தி குறித்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் ராமேஸ்வரம் ரயில் புறப்பட்டு சென்றனர். மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குருசாமி தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், சுவாமிமலை விமலநாதன், செந்தில்வேலன் சீனிவாசன், சத்தியநாராயணன், கண்ணன், பாலாஜி, கமலதியாகராஜன் உள்ளிட்ட 9 விவசாயிகள் 4 நாட்கள் பயணமாக தெலங்கானா சென்றனர். கருத்தரங்கம் முடிந்தவுடன் தெலங்கானா மாநில முதல்வர் மற்றும் கவர்னரையும் விவசாயிகள் சந்திக்கின்றனர்.

Related Stories: