மண், கல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

இடைப்பாடி, செப்.11: இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களில் மணல் எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோட்டாட்சியர் தர்மலிங்கம் உத்தரரவின்பேரில், ஆர்ஐ முனிசிவபெருமாள், விஏஓ குணசேகரன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, குள்ளம்பட்டி பகுதியில் இருந்து மண் பாரத்துடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது.  இதேபோல், செட்டிப்பட்டி சாலையில் உரிய அனுமதியின்றி டிராக்டரில் கற்கள் எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, இரு வாகனங்களையும் கைப்பற்றிய அதிகாரிகள், தேவூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், டிப்பர் லாரிக்கு ₹27500 மற்றும் டிராக்டருக்கு ₹25000 அபராதம் விதித்தனர். மேலும், அரசிராமணி மற்றும் தேவூர் பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories: