தேவாரத்தில் நிலக்கடலை எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

தேவாரம், செப்.10: தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் நிலக்கடலை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள சாக்குலூத்து, மங்கமுத்து, பெரம்புவெட்டி, பிள்ளையாரூத்து மலையடிவாரத்தை ஒட்டி உள்ள இடங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் நிலக்கடலை விவசாயம் நடக்கிறது. இங்கு விளையக்கூடிய நிலக்கடலை அதிகமான அளவில் மதுரைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த வருடம் போதிய மழை இல்லாதநிலையில் நிலக்கடலை விவசாயத்தின் பரப்பு குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தமிழ்மாதமான வைகாசியில் பெய்த மழையில் நிலக்கடலை விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது 3 மாதத்திற்கு பிறகு விளைந்துள்ளது. இதனை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கடலை விவசாயம் குறைந்துள்ள நிலையில் மதுரை வியாபாரிகள் தேவாரத்திற்கு வந்துள்ளனர். நிலக்கடலை 3 தரமாக பிரிக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. 1 கிலோ ரூ.38 முதல் 43 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தவிர நிலக்கடலை விவசாயிகள் மொத்தமாக ஒன்று சேர்ந்து தாங்களாவே மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பவும் செய்கின்றனர். இந்த வருடம் எல்லா மாவட்டங்களிலும் நிலக்கடலை விளைச்சல் குறைந்துள்ளதால் தேவாரம் நிலக்கடலைக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு விதைத்த நிலக்கடலை தற்போது அதிகளவில் மலையடிவாரத்தில் விளைந்துள்ளது. இதனை தற்போது பறித்து மதுரைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வியாபாரிகளும் தேவாரத்திற்கு அதிகளவில் வந்துள்ளனர் என்றனர்.

Related Stories: