ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

ஆண்டிபட்டி, மே 18: ஆண்டிபட்டி அருகே, குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு குன்னூர் வைகை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதமாக வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சரிவர தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் மாயாண்டிபட்டி கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்ததால் கடந்த 3 வாரத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லை என தெரிகிறது.

இதனால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று முன் தினம் மாலை ஊரில் உள்ள ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த ராஜதானி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: