போடி பகுதியில் தொடரும் சாரல் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்

போடி, மே, 22: போடி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த நான்கு நாட்களாக போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகள் நனைந்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தேனி மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில் போடி பகுதியில் கனமழை இல்லாமல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. இதனால் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சில சமயங்களில் சிறிது நேரத்திற்கு மட்டும் கனமழை பெய்தது. பின்னர் சாரல் மழை விட்டு விட்டு தொடர்ந்தது.

தொடர் சாரல் மழையால் சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் சிரமமடைந்த போதும் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர் அதிகளவு ஊற்றெடுக்க வழி கிடைத்திருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் பயிர் சாகுபடிக்கு பாசனம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றனர்.

The post போடி பகுதியில் தொடரும் சாரல் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: