அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்

சேலம், செப்.10: சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாதமாக, செப்டம்பர் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு துறைகள் சார்பில், நடப்பாண்டு பல விழிப்புணர்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களிடம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஓவியம், கதை சொல்லுதல், கட்டுரை எழுதுதல், ஸ்லோகம் எழுதுதல், கவிதை எழுதுதல், பேச்சுப்போட்டி, ரங்கோலி மற்றும் சமையல் போட்டிகளை வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு நடத்த வேண்டும். பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வட்டார அளவில் போட்டிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

மேலும், ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகம், பொம்மலாட்டம் போன்றவற்றை நடத்த வேண்டும். பள்ளி சுற்றுச்சுவர்களில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வாசகங்களை எழுதுவதுடன், மாதம் முழுவதும் ஊட்டச்சத்து சார்ந்த உறுதிமொழியை காலை வழிபாட்டின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்க வேண்டும். மேற்கண்ட நிகழ்வுகளின் புகைப்படங்களை, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சிஇஓ கணேஷ்மூர்த்தி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: