அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க போராட்டம் தள்ளிவைப்பு

நாகர்கோவில், ஆக.20: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியனமம் தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமனம் பெற்று ஊதியமின்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், 2017-18ம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய ஆணையில் உள்ள குறைகளை சரி செய்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை கடந்த ஒரு மாத காலமாக சந்தித்து முறையீடு செய்தனர். மேலும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 19ம் தேதி பட்டினி போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலரை நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தகுதியான முதுகலை ஆசிரியர் நியமனங்கள் ஏற்பளிப்பு செய்யப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்துள்ளார். மேலும் பணியிட நிர்ணய குறைபாடுகள் விதிகளுக்கு உட்பட்டு சரி செய்யப்படும். இதர கோரிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பட்டினி போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்று சங்க மாவட்ட செயலாளர் விஜயராஜ் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பொதுச்செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் சிவ ரமேஷ், வினோத், ஜோஸ்பென்சிகர், அஜின், டோமினிக்ராஜ், சாந்தசீலன், ஷெரின், ஷெர்லின் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: