மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கல்லணை கால்வாயில் மணல்மேடு அப்புறப்படுத்தும் பணி மும்முரம் காலதாமதமென விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவெறும்பூர், ஆக.14: தமிழக அரசு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் கல்லணை காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாய் ஆற்றில் தண்ணீர் தேங்காமல் செல்வதற்கு ஏதுவாக மணல் மேட்டை ராட்சத இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை காலதாமதமாக ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக அரசு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி நேற்று காலை தண்ணீர் திறந்தது. அப்படி திறக்கப்பட்ட தண்ணீர் இரண்டொரு நாட்களில் தஞ்சை மாவட்டம், கல்லணை வந்தடையும். கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என 4 ஆறுகளிலும் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்படும்.

Advertising
Advertising

இந்நிலையில் கல்லணை கால்வாய் ஆற்றில் செல்லும் தண்ணீர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பேராவூரணி, புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. கல்லணை கால்வாய் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சரியாக கடைமடை பகுதிக்கு சென்று சேரவில்லை என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கல்லணை கால்வாய் ஆற்றில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டும் ஆற்றின் மணல்மேட்டின் காரணமாகத்தான் தண்ணீர் இழுத்து வாங்கவில்லை. இதனால் மிதக்கும் பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுப்பணித்துறையினர் கல்லணை கால்வாய் ஆற்றில் மணல் மேட்டை அப்புறப்படுத்தினர். அப்படி கல்லணை கால்வாயில் மணல் எடுக்கப்பட்டதால் கல்லணை கால்வாய் ஆற்றின் கரை ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்படி ஏற்பட்ட மண்ணரிப்பை இந்த ஆண்டு பொதுப்பணித்துறையினர் ஓரளவு சரி செய்துள்ளனர். அப்படி கல்லணை கால்வாய் ஆற்றில் எடுக்கப்பட்ட மணலை திருட்டு மணல் அள்ளும் கும்பல் அள்ளிச்சென்றுவிட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டும் கல்லணை கால்வாய் ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பொதுப்பணித்துறை கல்லணையில் இருந்து 13 கி.மீ. தூரத்திற்கு மணல் அள்ளுவதற்கு முடிவு செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை நேற்று தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் பணியை மிகவும் தாமதமாக கல்லணை கால்வாய் ஆற்றில் மணல் தண்ணீர் செல்வதை தடுப்பதாக கூறி பொதுப்பணித்துறையினர் மிகவும் காலதாமதமாக பணியை தொடங்கி உள்ளனர். இவர்கள் ஒரு கி.மீ. தூரம் கூட கல்லணை கால்வாய் ஆற்றில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்குள் மணலை அள்ளமாட்டார்கள். அப்படி மணல் அள்ளுவதனால் கரைஅரிப்பு ஏற்படுவதுடன் மணல் கொள்ளையர்களுக்கு மணல் எடுத்து செல்வதற்கு எளிய வழியாகும்.கடந்த ஆண்டு 5 கி.மீ. தூரம் மணல் அள்ள திட்டமிட்டு 100 மீட்டர் கூட மணல் அள்ளவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதுபோல் தற்போது 13 கிமீ தூரத்திற்கு மணல் அல்ல ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் போய்விடும் என்றும் விவசாயிகள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

Related Stories: