அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது

திருச்சி, ஆக.14: தமிழக அரசு 15வது சட்டசபையை நிறைவு செய்ய இன்னும் 16 மாதங்களே உள்ளதால், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. இதுபற்றி தமிழக அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 110வது விதியின் கீழ் அறிவித்த அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் பணியில் சேர்ந்த பின், கடந்த 2011லிருந்து 8 ஆண்டுகளாக மே மாதத்துக்கு சம்பளம் தரவில்லை. இது அரசாணைக்கு எதிரானது. இதை சரி செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் சேர வேண்டிய ரூ.53,400 நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில் அரசாணைப்படி ஒருவருக்குக் கூட கூடுதல் பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூடுதல் பள்ளிகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கினால் கூட கூடுதல் சம்பளம் கிடைக்கும்.

Advertising
Advertising

ஆந்திராவை போன்று தமிழகத்திலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 30 சதவீத ஊதிய உயர்வையும், பணி நிரந்தரம் செய்யும் கமிட்டி அமைக்கப்படும் என்ற அமைச்சர் அறிவிப்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய நிலையிலேயே ஏற்கனவே 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பணி நிரந்தரமே இனி தீர்வாகும். இதை அரசு காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளித்த நிதியை உபயோகப்படுத்தாமல் திருப்பி அனுப்பியதற்கு பதிலாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

எங்கள் நியமனத்துக்குப் பின் கல்வித்துறையில் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமித்த துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் இரவுக்காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். போராட்ட நாட்களிலும் பணி செய்யும் எங்களை அரசு நினைத்தால் ஒரே அரசாணையில் பணி நிரந்தரம் செய்ய முடியும். எனவே தற்போதைய தமிழக அரசு 15வது சட்டசபையை நிறைவு செய்ய இன்னும் 16 மாதங்களே உள்ளன. இதற்குள் அரசு விரைந்து முடிவு செய்து 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட சிறப்பு கவனம் செலுத்தி பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: