மணப்பாறை அருகே சென்னப்பசுவாமி கோயில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மணப்பாறை, ஆக. 14: மணப்பாறை அருகே மொண்டிபட்டி சென்னப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி அம்மாள், பீரேஷ்வரசுவாமி, அகோர வீரபத்திர சுவாமி, ஏழு கன்னிமார்கள், பாப்பாத்தி மற்றும் காவேரியம்மன் கோயில்கள் உள்ளன. திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த குரும்பர் இன மக்கள் இத்தெய்வங்களை பொது தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தங்களது சொந்த ஊரில் இருந்து மொண்டிப்பட்டிக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து திருவிழாவை நடத்திவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வது வழக்கம்.

Advertising
Advertising

அதேபோல், இந்தாண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் மொண்டிப்பட்டிக்கு வந்து தங்கி திருவிழா நடத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வரிசையாக அமர்ந்திருந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினார். பின்னர் பொங்கல் படையல், அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெண்கள் தங்கள் குலம் தழைக்க வேண்டி சாட்டையடி வாங்கினர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஊத்துப்பட்டி குரும்ப கவுண்டர் சேர்வை ஆட்டம் நடந்தது.

Related Stories: