ஆவடி, ஆக.14: ஆவடி அருகே கஞ்சா விற்கும் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரை சரமாரியாக வெட்டிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவேற்காடு, பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (26) பிரபல ரவுடி. இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள காலிமைதானத்துக்கு வந்தார். பின்னர், அனைவரும் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து ராஜேஷுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மறைத்துவைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ராஜேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுத்த அவரது நண்பர் விஷாலுக்கும் வெட்டு விழுந்தது. இதை பார்த்த மற்றவர்கள் ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.