பேச்சிப்பாறை அணை புனரமைப்பு நிறைவடையும் நிலையில் சாய்வணை பணி

குலசேகரம், ஆக.14: பேச்சிப்பாறை அணையில் சாய்வணை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.  இனி அணையில் நீர் தேக்குவதால் பாதிப்பு ஏற்பாடாது என அதிகாரி தெரிவித்துள்ளார்.குமரிமாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளுக்கு நீர்பாசன வசதியளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பேச்சிப்பாறை அணை. குமரிமாவட்ட அணைகளிலுள்ள நீராதாரத்தை பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் 79 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பும், ராதாபுரம் தாலுகாவில் 17 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பும் என மொத்தம் 96 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பு பாசன வசதி பெறுகிறது. 48 அடி கொள்ளளவு 100 சதுரமைல் பரப்பளவுள்ள நீர்பிடிப்பு பகுதியைக் கொண்ட பேச்சிப்பாறை அணை இந்தியாவிலுள்ள பழமையான அணைகளுள் ஒன்று. நூற்றாண்டுகளை கடந்த இந்த அணையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து 61.30 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகள் தொடங்கியது.

புனரமைப்பு பணிகளில் முக்கியமானது அணையின் வெளிப்பகுதியில் அணைச்சுவரின் பலத்தை அதிகரிக்கும் வண்ணம் சாய்வணை அமைப்பது மற்றும் அவசர காலங்களில் தண்ணீரை வேகமாக வெளியேற்றுவதற்கு வசதியாக புதியதாக 8 மறுகால் மதகுகள் அமைப்பது போன்றவையாகும். அதோடு ஏற்கனவே உள்ள மறுகால் மதகுகள், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் போன்றவற்றை நவீனப்படுத்துவது, அணைசுவர்களில் துளையிட்டு ரசாயன கலவை செலுத்தி பலப்படுத்துவது போன்ற பணிகளுக்கும் திட்டமிடப்பட்டன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டது.

    அணையின் புனரமைப்பு பணிக்காக கடந்த ஆண்டு அணைகளிலிருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு சாய்வணைக்கான அடித்தள பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்ததால் சாய்வணை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் அணையிலிருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றபட்ட பின்னர் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றன. இதனால் தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைக்கு வரும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு மட்டுமே தேக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. குமரிமாவட்டத்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் பருவமழை சரியாக இல்லாததால் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவான நிலையில் இருந்து வந்தது. இதனால் சாய்வணை பணிகள் தடையின்றி வேகமாக நடைபெற்றன. இந்நிலையில் தற்போது சாய்வணை அதன் முழு உயரத்தை எட்டி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் வரும் நாட்களில் முழுமையான அளவு தண்ணீரை தேக்கமுடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஓராண்டாக வறட்சியில் தத்தளித்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

90 சதவிகித பணிநிறைவு   இதுகுறித்த பொறியாளர் ஒருவர் கூறுகையில் சாய்வணை பணிகள் 90 சதவிகிதம் நிறைவு பெற்றுவிட்டது. சிறு சிறு பணிகள், சிமெண்ட் பூச்சுகள் போன்றவை நடைபெற வேண்டியுள்ளது. இவை இரண்டு மாதத்தில் நிறைவடையும். தொடர்ந்து வெளிப்புற சுவரில் ரசாயன கலவை பூசுதல் மற்றும் கட்டிட பணிகள் நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் முழுமையாக அணையில் தேக்கி வைக்க முடியும். அணையில் நீர் தேக்குவதினால் இனிமேல் நடைபெற உள்ள பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. புதிதாக அமைக்கப்பட்ட மறுகால் மதகுகளிலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக தடுப்புசுவர் அமைக்கும் பணிகள் இடையூறாக உள்ள வீடுகள் அகற்றபட்ட பின்னர் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: