கன மழையால் ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது

பொள்ளாச்சி, ஆக.11:பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழையால், ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.   பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ய துவங்கியது. இந்த மழை பகல் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் என விடிய விடிய பெய்ததால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.  அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கன மழையால் பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக வழக்கத்தைதவிட அதிகமானது. ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடு என உயர்கிறது. நேற்று முன்தினம் நாள் முழுவதும் மழை பெய்ததுடன் இரவு மற்றும் நேற்றும் என விடிய விடிய கன மழை பெய்துள்ளது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த 120அடி கொண்ட ஆழியார் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 556 கன அடியாக அதிகரித்தது. காலை 10 மணி நிலவரப்படி நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

  அதுபோல், டாப்சிலிப்பை அடுத்த 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 279 கன அடியாக இருந்தது. தற்போது  நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. பிஏபி அணைகளில் உள்ள நீர் பிடிப்புகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து விடிய விடிய பெய்து வரும் கன மழையால் விரைவில் அணைகளின் நீர்மட்டம் முழு அடியையும் எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கன மழை காரணமாக, பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவியிலும் தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்து, நேற்றும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குரங்கு அருவியில் காட்டாற்று வெள்ளம்போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க, மூன்றுபேர் கொண்ட வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை நிலவரப்படி மழையளவு வருமாறுபரம்பிக்குளம் 60மிமீ(மில்லி மீட்டரில்), ஆழியார் 26.4, மேல் நீரார் 132, கீழ் நீரார் 88, காடம்பாறை 44, சர்க்கார்பதி 56, வேட்டைக்காரன்புதூர் 30, மணக்கடவு 57.2, தூணக்கடவு 52, பெருவாரிபள்ளம் 63, அப்பர் ஆழியார் 20, நவமலை 16, பொள்ளாச்சி 50, நல்லாறு 23, நெகமம் 27, சுல்த்தான்பேட்டை 15, பொங்களூர் 3, உப்பாறு 5, பல்லடம் 7, பெதப்பம்பட்டி 24, கோமங்கலம்புதூர் 23 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Related Stories: