முசிறி அருகே நூதனமுறையில்

முசிறி, ஆக.11:  முசிறி அருகே வீரமணிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (32). இவர் சொந்தவேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் ராஜாவின் சித்தப்பா ராஜூ (64) என்பவர் இருந்தார். அப்போது பைக்கில் வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் ராஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மிகுந்த உரிமையோடும், அன்போடும் ராஜாவை பற்றி விசாரித்துள்ளார். பின்னர் அருகில் இருந்த மாமரத்தில் மாவிலைகள் கொஞ்சம் பறித்துக்கொடுக்குமாறு கேட்டுள்ளார். ராஜூ சென்று மாவிலைகளை பறித்துக்கொண்டிருந்தபோது டிப்டாப் ஆசாமி வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து லாக்கரை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம், 3 பவுன் மோதிரங்கள் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமாகிவிட்டார்.மாவிலைகளுடன் வந்த ராஜூ வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். தகவலறிந்து வீட்டிற்கு வந்த ராஜா நடந்த சம்பவம் குறித்து முசிறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலை விபத்தில் ஒருவர் பலி: நாமக்கல் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி அசோக்குமார்(45). இவர் இவரது உறவினர் வீரக்குட்டி என்பவருடன் சமயபுரம் கோயிலுக்கு செல்வதற்காக பைக்கில் வந்துள்ளார். நாமக்கல்துறையூர் மெயின் ரோட்டில் கலிங்கப்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த வீரக்குட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Advertising
Advertising

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை:  தா.பேட்டை அருகே கண்ணனூரை சேர்ந்தவர் பிரபு(35), லாரி டிரைவர். இவர் தனக்கு வயதாகி விட்டது என்றும், சரிவர மணமுடிக்க பெண் அமையவில்லை என்ற வருத்தத்தில் பிரபு இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.விஷஜந்து கடித்து பெண் பக்தர் சாவு: புதுகை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த சின்னஉடையாப்பட்டியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 7ம் தேதி பாதயாத்திரையாக சமயபுரம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை திருச்சி ஏர்போர்ட்டை கடந்து அண்ணா கோளரங்கம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது மிகவும் அசதியாக இருந்ததால் அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் அனைவரும் படுத்து உறங்கினர். அப்போது பாதயாத்திரையில் வந்த சின்னப்பன் மனைவி மாரியம்மாள்(45) திடீரென அலறினார். அப்போது தன்னை ஏதோ கடித்துவிட்டதாக கூறினார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த பகுதியில் தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரியம்மாள் அதிகாலை 5.30 மணிக்கு இறந்தார். அவரை பாம்பு போன்ற விஷஜந்துக்கள் கடித்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு: திருச்சி சத்திரம் பூசாரி தெருவை சேர்ந்தவர் கருப்பையன்(23). ஆர்டர் அடிப்படையில் இருப்பிடம் தேடி சென்று உணவு வழங்கும் வேலை செய்து வந்தார். இவருக்கும் சென்னை மதுரவாயலை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் ரோஜா(19) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ரோஜா நெஞ்சு வலிப்பதாக கணவரிடம் கூறி வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த கோட்டை உதவி கமிஷனர் சுஜித் கணவர் உள்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், ஆர்டிஓ தனி விசாரணை நடத்தி வருகிறார்.வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் திருட்டு: துறையூர் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்வராஜ்(61), ஓய்வு போக்குவரத்துக் கழக ஊழியர். இவர் முழு உடல் பரிசோதனை செய்வதற்காக மனைவி ஊர்மிளாதேவி(55)யை அழைத்துக்கொண்டு திருச்சி சென்றார். பிற்பகல் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கேட்டின் பூட்டு திறந்த நிலையில் தொங்கியது. அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் 5 ஜோடி தோடு, 3 பவுன் வளையல் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: