மாணவிகளை கேலி செய்து மிரட்டிய விவகாரம்: இரு பிரிவினர் மோதல்; சாலை மறியல்: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பொதட்டூர்பேட்டையில் பரபரப்பு

பள்ளிப்பட்டு, ஜூலை 23: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகளை கேலி செய்த விவகாரத்தில்  இருபிரிவினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பிரிவை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி மற்றொரு பிரிவினர் சாலை மறியல் செய்ததால் பொதட்டூர்பேட்டையில் 5 மணி நேரம் போக்குவரத்து தடை பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதட்டூர்பேட்டை ேபருந்து நிலையத்துக்கு வரும் ஒரு பிரிவை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவு இளைஞர்கள் கேலி செய்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இருபிரிவு இளைஞர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் ேநற்று முன்தினம் இரவு பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை ஓரத்தில் ஒரு பிரிவை சேர்ந்த சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மற்றொரு பிரிவை சேர்ந்த   6 பேர் 3 பைக்குகளில் வேகமாக வந்தனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெருப்பு பொறி பறக்கும் வகையில் பைக் ஸ்டேண்டை கீழே உராச விட்டு வந்துள்ளனர். இதை சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.   

இதனால் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த ஒருவரை பைக்குகளில் வந்தவர்களில் ஒருவர்  கட்டையால் அடித்ததாக தெரிகிறது.இது குறித்து சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் சாலையோரத்தில் நின்றிருந்தவரை தாக்கிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே மற்றொரு பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணிக்கு செல்லும் பஸ்கள் புறப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பள்ளிப்பட்டு தாசில்தார் மீனா, வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ், பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பைக்கில் வேகமாக வந்து பொதுமக்களை அச்சுறுத்தியுடன் உருட்டுகட்டையால் அடித்தவர்கள் மீது    நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என மறியல் போராட்டத்தை  தொடர்ந்தனர்.  ஒரு பிரிவினருக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதயடுத்து கூடுதல் போலீசாருடன் பிற்பகலில் திருத்தணி டிஎஸ்பி சேகர் சம்பவ இடத்திற்கு வந்தார். சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 24 மணி நேரத்தில் பைக்கில் வந்து தாக்கியவர்கள் மீதும், இளம் பெண்களை கேலி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தார். அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். காலை 9 மணி அளவில் தொடங்கிய சாலை மறியல் ேபாராட்டம் பிற்பகல் வரை நீடித்ததால்  சுமார் 5 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories: