திறப்பு விழாவுக்கு முன்னதாகவே நசரத்பேட்டையில் புதிதாக கட்டிய அரசு பள்ளிக்கட்டிடத்தில் விரிசல்: ஆய்வு செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

திருவள்ளூர், ஜூலை 23: திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம், மணலைக்கொண்டே கட்டியதால், திறப்புவிழா காணும் முன்னரே ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியை ஆய்வு செய்யக்கோரி  அப்பகுதி மக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கொடுத்த மனுவின் விவரம்:

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ளது நசரத்பேட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் ஏற்கனவே அரசு உயர்நிலை பள்ளி இயங்கிவருகிறது. போதிய வசதி இல்லாததால், இப்பள்ளி அருகில் தற்போது புதிதாக அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் 252 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மீஞ்சூர் - வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை சந்திப்பில் அமைந்துள்ளதால், நெடுஞ்சாலையில் இயங்கிவரும் கனரக வாகனங்களின் அதிர்வுகளால் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பள்ளி சுவற்றை குச்சியால் தேய்த்தாலே, சுவரின் சிமென்ட் பூச்சுகள் கீழே கொட்டுகிறது. மேலும் கட்டிடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. திறப்பு விழாவிற்கு முன்பே இந்த அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இக்கட்டிடம் திறந்து பயன்பாட்டுக்கு வந்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை (கட்டிடம்) பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், தட்டிக்கேட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தை நீக்கம் செய்து, தங்களுக்கு சாதகமாக புதிய பெற்றோர் ஆசிரியர் கழகம் துவக்க தலைமை ஆசிரியர் முற்படுகிறார்.

எனவே வருங்கால ஆபத்தினை உணர்ந்து தரமற்ற கட்டிடத்தை ஆய்வுசெய்து, ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை (கட்டிடம்) பொறியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி: உடலை உடனே பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனை முன் மக்கள் மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Related Stories: