மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் மணல் கொள்ளையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அதிராம்பட்டினம், ஜூலை 19: அதிராம்பட்டினம் அடுத்த மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் மணல் கொள்ளையை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் மணல் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர். அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் மகாராஜா சமுத்திரம் காட்டாறு உள்ளது. இப்பகுதியில் உள்ள மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, சேண்டாகோட்டை, மாளியக்காடு மற்றும் ராஜாமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் தேவைக்கு பிரதான நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த காட்டாற்றில் தொடர்ந்து மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதால் கடல் மட்டத்தைவிட காட்டாற்று மட்டம் கீழே போய்விட்டது. இதனால் நல்லநீர் உப்புநீராக மாறி வருகிறது. இதனால் இந்த நீரை குடிக்கவும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து அரசுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இரவு, பகலில் ரோந்து பணியில் ஈடுபட்டு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரு லாரியை 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். இதைதொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி மற்றும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டாற்றில் உள்ள மணலை தோண்டி அதில் வரும் ஊற்றுநீரை எடுத்து தான் குடித்து வருகிறோம். இந்நிலையில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் சுத்தமாக இருந்த அந்த தண்ணீர் தற்போது கடல்நீர் உட்புகுந்து உப்பு தண்ணீராக மாறிவிட்டது. இதனால் அந்த ஊற்று நீரை குடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்ட. இனி நாங்கள் குடிப்பதற்கு கூட தண்ணீருக்கு கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் இந்த நீராதாரத்தை காப்பாற்ற முடியும் என்றனர்.

Related Stories: