பூச்சிக்கொல்லி மருந்து கடைகளில் போலியான, ஆபத்து விளைவிக்ககூடிய மருந்துகளை விற்று கொள்ளை லாபம்

திண்டுக்கல், ஜூலை 16: விவசாயிகளுக்கு போலியான ஆபத்து விளைவிக்ககூடிய மருந்துக்களை விற்று, விவசாயிகளை ஏமாற்றி பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகளில் கொள்ளை லாபம் அடிக்கின்றனர் என விவசாயிகள் கலெக்டரிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தலைமையில் வந்த விவசாயிகள் திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாய பூச்சிக்கொல்லி மருந்துக் கடைகளில் பூச்சி மருந்து விற்கப்படுகிறது. இதில் பயோ மருந்து என்ற பெயரில், சீனா, இஸ்ரேல் உட்பட பல வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்கின்றனர். இந்த தடை செய்யப்பட்ட மருந்தை இங்கு பயோ மருந்து என்ற பெயரில் இன்னும் பல்வேறு பெயர்களில் பல நிறுவனங்கள் நுாறு மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
Advertising
Advertising

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட பல இடங்களில் இந்த போலி மருந்து தயாரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக விவசாயிகளிடம் இந்த ஆபத்தான போலி, பூச்சி மருந்து விற்பனை மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. க்ளைபோசேட் என்ற ரசாயன பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தியதால் பஞ்சாபில் 85 ஆயிரம் பேர் வரை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், விவசாயிகளிடம் ஏமாற்றி கொள்ளையடிப்பதை தடுக்கவும், மேற்கண்ட பயோ மருந்து நிறுவனங்கள் விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெறும் நிலையும் ஏற்படும். இந்த மருந்து விற்பனைக்கு தமிழக அரசிடமோ, வேளாண்மை துறையிடம் அனுமதி பெறவில்லை என்றும் தெரிகிறது. இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: