சட்டமன்ற மானிய கோரிக்கையில் குறுவை தொகுப்பு திட்டத்தை விரைவில் அறிவிக்க வேண்டும்

தஞ்சை, ஜூலை 16: தஞ்சை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் திருவையாறு அருகே கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையை சேர்ந்த முகம்மது ஜக்கரியா தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தமனுவில்,கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி பாத்திமா நகரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கடந்த 2016ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள 54 வீடுகள் முற்றிலும் தீ பிடித்து எரிந்தது. எங்களில் பட்டா வைத்துள்ள 9 பேர் குடும்பத்தினர் முறையாக சொந்த செலவில் வீடுகள் கட்டியுள்ளனர். பட்டா வைத்துள்ள 9 பேர் உள்ளிட்ட 54 குடும்பங்கள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்தும் இதுவரை மின் இணைப்பு அளிக்கப்படவில்லை. 54 குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertising
Advertising

பள்ளிஅக்ரகாரம் பம்பிங் ஸ்டேசன் சாலையை சேர்ந்த ஜெனிபர் உள்ளிட்ட பொதுமக்கள் அளித்த மனுவில், பள்ளிஅக்ரகாரம் 1வது வார்டு பம்பிங் ஸ்டேசன் சாலை பகுதியில் 3 தலைமுறையாக குடியிருந்து வருகிறோம். குடிநீர் குழாயே இங்கு இல்லை. இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.பூதலூர் அருகே விண்ணமங்கலம் கீழகள்ளர் தெருவைச் சேர்ந்த மாலதி அளித்த மனுவில்,எங்கள் கிராமத்தில் வெண்ணாற்று பாசனத்திலிருந்து பிரியும் டி பிரிவு தட்டாஞ்சி வாய்க்காலை வரும் சம்பா பருவத்திற்குள் தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் அளித்த மனுவில், ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு 58 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறுவை தொகுப்புத் திட்டத்தை ஜூன் மாதமே அறிவித்து வந்தார். ஆனால் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக கூறிக் கொண்டு அவரது திட்டங்களை கைவிடுவது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது. வரும் 17ம் தேதி விவசாய மானியக் கோரிக்கை நிறைவேறும் நிலையில் இன்னும் 2 நாட்களில் இத்திட்டத்தை அறிவிக்கவில்லை என்றால் இந்த ஆண்டு இத்திட்டம் இல்லை என்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

5 தலைமுறை குத்தகை நிலத்திற்கு இனாம்பட்டா வழங்க நடவடிக்கை:தஞ்சை கீழவஸ்தாச்சாவடி புதுப்பட்டினத்தை சேர்ந்த நித்தியானந்தம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், புதுப்பட்டிணத்தில் மன்னர் காலத்தில் சாதி மதம் பாராமல் முக்கியஸ்தர்களுக்கு இனாமாக நிலங்கள் கொடுக்கப்பட்டது.அந்த வகையில் காரைக்குடியை சேர்ந்த கிருஷ்ணப்ப செட்டியார் வகையறாவிற்கு கொடுக்கப்பட்டு இந்த இனாம் மேல்வாரம் என்று கூறப்படும் முறையில் சாகுபடிக்கு 5 தலைமுறைக்கு முன்பாக எங்களுடைய மூதாதையினர் நிலங்களை குத்தகைக்கு பெற்று குத்தகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகுபடி அனுபவ உரிமை சிறு, குறு விவசாயிகளான எங்களிடமே உள்ளன. ஆனால் பட்டாதாரர் தன்னிச்சையாக 43 ஏக்கர் நிலத்தை பல கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இவ்விடத்தை எங்களுக்கு இனாம் பட்டா வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: