அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4வது நாளாக பற்றி எரியும் தீ தீயணைப்பு வாகனம், வாட்டர் டேங்க், பொக்லைன்களுடன் 200 பணியாளர்களை கொண்டு அணைக்கும் பணி மும்முரம்

திருச்சி, ஜூலை 12: திருச்சி மாநகராட்சி குப்பை கிடங்கில் தொடர்ந்து 4வது நாளாக தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டது. நாளை அந்த பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.திருச்சி மாநகராட்சியில் தினமும் 400 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு பகுதியிலும் உரமாக மாற்றப்படுகிறது. அதுபோக மீதமான குப்பைகள் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கும் உரம் தயாரிக்கப்பட்ட போதிலும் குப்பைகள் குறையவில்லை. மலைபோல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 8ம் தேதி காலை 11 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. எனவே திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. 122 தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

தொடர்ந்து தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாலும், குப்பைக்குள் கிடக்கும் கண்ணாடி துண்டுகள், இரும்பு கம்பிகள் குத்தி வீரர்கள் காயம் அடைந்தாலும் அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நேற்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முககவசம் அணிந்தபடி அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.4 நாளாக தொடர்ந்து தீ எரிவதால் அந்த பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலானவர்கள் வீடுகளை காலி செய்து கொண்டு அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியமங்கலம் குப்பை கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் புகை மூட்டத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நாளை மருத்துவ சிகிச்சை அளிக்க இலவச முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த முடியாதது குறித்து தீயணைப்பு அதிகாரி கூறியதாவது: குப்பைகள் 70 அடி உயரத்துக்கு குவிந்து இருக்கிறது. மேல் பகுதியில் தண்ணீர்விட்டு அணைக்கிறோம். சிறிது நேரத்தில் அடியில் இருந்து தீ மேலே பரவி வருகிறது. இதனால் தீயை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 4வது நாளாக புகை மூட்டத்திற்குள்ளே நிற்பதால் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், 10 தீயணைப்பு வாகனங்கள், 20 வாட்டர் டேங்கர் லாரிகள், 10 பொக்லைன் இயந்திரங்கள், 200 பணியாளர்களை ெகாண்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தீ அணைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதில் இருந்து புகை வெளியேறுகிறது. இதனால் குப்பைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு கிளறிவிட்டு தண்ணீர் அடிக்கும் பணி நடக்கிறது. இன்று (நேற்று)இரவுக்குள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும் புகையால் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்களும் போடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: