தஞ்சை மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தஞ்சை, ஜூலை 12: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,250 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தஞ்சை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜவேல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய அளவில் மக்கள் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், வட்டார நீதிமன்றங்களிலும் நடக்கிறது. இதில் நீதிபதிகள் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளை அழைத்துபேசி சமரச வழி மூலம் நிரந்தர தீர்வு காணப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 2,200 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்திலும், வட்ட நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 28,340 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 4,250 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. இவற்றில் 2,000க்கும் அதிகமான வழக்குகளில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்படும் வழக்குகளை அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதி தலைமையில் ஊழியர்கள் கொண்ட வழக்குகள் அடையாளம் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், பரிந்துரை செய்யப்படவுள்ள வழக்குகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சமரசத்துக்குரிய குற்றவியல் வழக்கு, காசோலை மோசடி வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, மண வாழ்க்கை பிரச்னை தொடர்பான வழக்கு, குடும்பநல நீதிமன்ற வழக்கு, தொழிலாளர் ஊதியம், இதர சலுகைகள் தொடர்புடைய வழக்கு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு, உரிமையியல் வழக்கு (சொத்து மாற்றம், பாகப்பிரிவினை, வாடகை, வங்கிக்கடன் வசூல், வாழ்வாதார உரிமைகள்), வருவாய்த் துறை வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது. தீர்வு கிடைத்த பிறகு முத்திரைத்தாள் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்றார்.

Related Stories: