பள்ளி பஸ்சில் டிரைவருக்கு திடீர் வலிப்பு ஓரங்கட்டி நிறுத்தியதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருச்சி, ஜூலை 11: திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான பஸ்களில் அழைத்து வரப்பட்டு படித்து வருகின்றனர். மாலையில் பள்ளி முடிந்து மீண்டும் பஸ்களில் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் பள்ளி முடிந்ததும் திருச்சி நகர பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டவர்களை பஸ்சில் அழைத்துக்கொண்டு சென்றனர். பஸ்சை நடராஜபுரத்தை சேர்ந்த மனோகர்(48) என்ற டிரைவர் ஓட்டினார். அனைவரையும் வீடுகளில் விட்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அரியமங்கலம் மேம்பாலத்தில் பஸ் ஏறியபோது டிரைவர் மனோகருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவர் சமயோஜிதமாக பாலத்தின் ஓரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு பஸ்சில் அப்படியே சாய்ந்துவிட்டார்.

அப்போது பஸ்சில் இருந்த உதவியாளர் டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் முத்தரசு விசாரணை நடத்தினார்.

மனோகருக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வலிப்பு ஏற்பட்டிருந்தால் அவர் நிலை தடுமாறி பஸ் விபத்துக்குள்ளாகி குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். யார் செய்த புண்ணியமோ எங்கள் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். ஆனாலும் டிரைவர் இறந்தது கவலை அளிக்கிறது என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

Related Stories: