அரக்கோணம் அருகே பயங்கரம் பெண் டெய்லர் வெட்டிக்கொலை படுகாயங்களுடன் தாய்க்கு தீவிர சிகிச்சை

அரக்கோணம், ஜூலை 11: அரக்கோணம் அருகே நேற்று பெண் டெய்லர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தாய் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைனூர் ராமசாமி நகரை ேசர்ந்தவர் நிர்மலா(42), டெய்லர். இவரது கணவர் ஜகதலபிரதாபன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், நிர்மலா, அவரது தாயார் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை இவர்களது வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது நிர்மலா உடலில் ஆங்காங்கே காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சற்று தொலைவில் படவேட்டம்மாள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், விஏஓ தணிகாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த படவேட்டம்மாளை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும், பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட் காணவில்லை. வீட்டிற்குள் அதிகாலை புகுந்த மர்ம ஆசாமிகள் நிர்மலாவை அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இதையடுத்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து, மோப்ப நாய் சிம்பா, நிர்மலாவின் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: