நோய் பரப்பும் நுண்ணுர மையத்தை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

திருச்சி, ஜூன் 27: நோய் பரப்பும் நுண்ணுர செயலாக்க மையத்தை கண்டித்து குப்பை கொட்டும் போராட்டம் அறிவித்த 3வது வார்டு மக்களிடம் ரங்கம் கோட்ட உதவி ஆணையர் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.திருச்சி ரங்கம் 3வது வார்டு பகுதியில் நுண்ணுர செயலாக்க மையம் உள்ளது. இந்த மையம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதிலிருந்து பறக்கும் குப்பையால் பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே நோய் பரவுவதை தடுக்க, நுண்ணுர செயலாக்க மையத்தை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நுண்ணுர செயலாக்க மையத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரங்கம் கோட்ட அலுவலகம் முன் குப்பை கொட்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, ரங்கம் கோட்ட உதவி ஆணையர் சிவபாலன் அப்பகுதி மக்களை அழைத்து நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனநாயக வாலிபர் சங்க ரங்கம் பகுதிக்குழு செயலாளர் தர்மா உள்பட பலர் பங்கேற்றனர். முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: