பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தின் வாயில் முன்பு படுத்த முதியவர்

ராமநாதபுரம், ஜூன் 27:  ராமநாதபுரம் நகர் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேக்மைதீன் மனைவி பசிதாபிவி. இவருக்கு சொந்தமான 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை வாங்கிய நபர் இவரது இடத்தையும் சேர்ந்து பட்டா மாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சேக்மைதீன் மனைவி கடந்த  ஆண்டு பட்டாவை மாற்றி தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற அதிகாரிகள் மேல் விசாரணைக்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று முறை அழைப்பு விடுத்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சேக்மைதீன்  மனைவி இறந்து விட்டார். அதிகாரிகள் பட்டா மாற்றி தராததால் மன உளைச்சல் தாங்காமல் என் மனைவி உயிரிழந்து விட்டார். ஒரு வருடத்திற்கு மேல் அலையும் எனக்கு உடனடியாக பட்டாவை மாற்றி தர வேண்டும் என நேற்று காலை தாலுகா அலுவலக வாசல் முன்பாக ரோட்டில் படுத்து முதியவர் போராட்டம் செய்தார். தகவலறிந்த அதிகாரிகள் சேக்முகைதீனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிகாரிகளின் துணையோடு பட்டா மாற்றப்பட்டுள்ளது. வயதான காலத்தில் நடக்க முடியாத நிலையில் என்னை அலையவிடுகின்றனர். 72 வயதாகும் எனக்கு சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. தாலுகா ஆபீசுக்கு அலைந்தே என் மனைவி உயிரிழந்து விட்டாள். ஆர்டிஓ விசாணைக்கு பின்னர் ஒரு மணி நேரத்தில் பட்டா தருகிறேன் என்றனர். ஒரு மாதத்திற்கு மேல் அலைகிறேன் என்றார்.

Related Stories: