லாரி மெக்கானிக்கை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

பவானி, ஜூன் 27:  பவானியில் லாரி மெக்கானிக்கை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பவானி, காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (65). லாரி ரிப்பேர் செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்குமார் (32). இத்தொழிலில் தந்தைக்கு உதவியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் பழுதாகி நின்ற லாரியை ரிப்பேர் செய்ய புறப்பட்ட சந்தோஷ்குமாரை, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அடித்து கடத்திச் சென்றது. மேலும், பட்டறையில் ரிப்பேருக்கு வந்த லாரியையும் எடுத்துக் கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதிக்கு சென்றது.  காரில் சென்றபோதே சந்தோஷ்குமார் லாரியை திருடி வந்ததாக நினைத்து கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளது. இறுதியில், கும்பல் தேடி வந்த திருட்டு லாரி இது இல்லை என தெரிந்ததும் சந்தோஷ்குமாரை இறக்கி சென்றனர்.   கடத்தப்பட்ட சந்தோஷ்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து பவானி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் லாரி பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு தெரியவந்ததால் சந்தோஷ்குமாரை காரில் கடத்தி சென்று தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு - மேட்டூர் ரோட்டில் நேற்று  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பவானி டிஎஸ்பி சார்லஸ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.  விசாரணையில், சந்தோஷ்குமாரை காரில் கடத்தி சென்ற கும்பல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் என்பதும், திருட்டு லாரி விற்பனை தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சந்தோஷ்குமாரைப் பிடித்துச் சென்றதும் தெரியவந்தது.  இச்சம்பவத்தில், அத்துமீறி செயல்பட்ட விழுப்புரம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories: