தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பொது தகவல் அலுவலர்கள் 30 நாளில் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை

தஞ்சை, ஜூன் 25: தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பொது தகவல் அலுவலர்கள் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதீப்குமார் தெரிவித்தார்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பிரதீப்குமார் பங்கேற்று 20 வழக்குகளை விசாரித்தார்.பின்னர் அனைத்து அரசு அலுவலர்கள் அடங்கிய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணைய ஆணையர் பிரதீப்குமார் பேசியதாவது: அரசு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்கள் கேட்கும் விவரங்களை அப்போதே கொடுத்துவிட்டால் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திடம் வர வாய்ப்பில்லை. இந்த சட்டம் என்பது இன்னொரு சுதந்திரமாக கருதப்படுகிறது. ஒருவர் 25 கேள்விகள் வரை கேட்கலாம். அதற்கு பதில் அளிப்பது அரசு அலுவலர்களின் கடமையாகும்.ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் 30 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் மேல்முறையீடு என்ற வரம்புக்குள் வரவே கூடாது.

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலரின் பெயர், பதவி, தொலைபேசி எண் கட்டாயம் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் வழங்கும் மனுக்களை அதிகாரிகள் படித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் மனுக்களை படிப்பதே இல்லை. அதேபோல் தேடியதில் உரிய ஆவணங்கள் இல்லை என்ற பதிலை யாரும் அளிக்கக்கூடாது, அந்த ஆவணங்களை தேடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.பெரும்பாலும் வருவாய்த்துறை தொடர்பான மனுக்கள் தான் அதிகம் வருகிறது. நிலம், நீர்நிலைகளை பாதுகாத்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் தயக்கம் காட்ட வேண்டாம் என்றார்.

Related Stories: