பிறப்பு,இறப்பு சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி

திருவாடானை, ஜூன் 25:  பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளைத் தவிர கிராமங்களில் சரியான விவரம் தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் கடந்த காலங்களில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறி விட்டனர். முன்பு ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் அதிகளவில் இல்லை. அரசு தமிழ் வழிப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் தங்களது குழந்தைகளை பள்ளியில் படிக்க சேர்த்துவிட்டனர். கடந்த காலங்களில் குழந்தைகளை சேர்க்க ஆதார் கட்டாயமாக தேவைப்படுகிறது. ஆனால் ஆதார் அட்டை பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். இப்போது எந்த பள்ளியில் சேர்த்தாலும் பொதுத்தேர்வுகள் எழுத வேண்டுமானாலும் அரசின் எந்த சலுகை பெற வேண்டுமானாலும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதேபோல் இறப்பு சான்றிதழ் முன்பெல்லாம் அவ்வளவாக தேவைப்படவில்லை. ஆனால் இப்போது வங்கி பரிவர்த்தனைகள் பட்டா மாறுதல்கள் நிலப் பரிமாற்றங்கள் என அனைத்திற்கும் இறப்புச் சான்று மற்றும் வாரிசுச் சான்றிதழ் தேவைப்படுகிறது. பிறப்பு, இறப்பு பதிவு செய்யாதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து இவ்வகை சான்றுகளை பெற்று வந்தனர். இந்நிலையில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இவ்வகை வழக்குகளை விசாரிக்க கூடாது எனவும் அந்தந்த பகுதி வருவாய் கோட்டாட்சியர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் மாவட்டம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சான்றிதழ்களை கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

நீதிமன்றத்தில் காலதாமதம் ஆகும். கோட்டாட்சியர் அலுவலகத்தில் விரைவாக இந்த சான்றிதழ்களை செலவில்லாமல் பெற்றுவிடலாம் என நினைத்த பொதுமக்களுக்கு நீதிமன்றத்தை விட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த வகை சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஆகிறது என்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், சரியான விவரம் தெரியாமல் குழந்தைகள் பிறப்பை பதிவு செய்யாமல் விட்டு விட்டோம். நீதிமன்றத்தில் காலதாமதமாகும், ஆனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சீக்கிரம் பெற்றுவிடலாம் என அங்கு விண்ணப்பித்தோம். விண்ணப்பித்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த விசாரணையும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

இதுபற்றி கேட்டால் ஆயிரக்கணக்கான மனுக்கள் தேங்கிக் கிடப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது எனக் கூறுகின்றனர். மாணவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் தேவைப்படுவதால் பிறப்புச் சான்று இருந்தால் மட்டுமே ஆதார் எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆதார் அட்டை இல்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் இந்த சான்றுகள் வழங்கப்பட்டன. அதேபோல் சிறப்பு முகாம்கள் அமைத்து இச்சான்றுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: