ரயிலில் ஏற முயன்று விழுந்த பெயிண்டரின் கால் துண்டானது ஜிஹெச்சில் சிகிச்சை தாமதத்தால் பரபரப்பு

ராமநாதபுரம், ஜூன் 21: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பக்கீர் முகம்மது மகன் பகுர்தீன்(45) மாற்றுத்திறனாளி. பெயிண்டராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை ராமநாதபுரத்திற்கு வேலைக்கு செல்வதற்காக பாம்பன் ரயில் நிலையத்திற்கு வந்தார். காலை 6 மணிக்கு  ராமேஸ்வரத்திலிருந்து  மதுரை செல்லும் பேசஞ்சர் ரயிலில்  ஏற முயன்றார். அப்போது படியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். ரயில் படிக்கட்டுக்கும் தண்டவாளத்திற்குள் இடையில் அவரது வலது கால் சிக்கிக் கொண்டது. இதில் அவரது கால்  துண்டானது. அங்கிருந்தவர்கள் பகுர்தீனையும் துண்டான காலையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்த நிலையில் இரவு பணி மருத்துவர் ஓய்வறையில் இருந்ததால் சிகிச்சை அளிக்க தாமதமானது. இதனால் அவரது உறவினர்கள் டாக்டர் எங்கே எங்கே என சத்தம் போட்டனர். காலை 7 மணி என்பதால் மருத்துவமனை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், செவிலியர்கள், செவிலியர்கள் பயிற்சி மாணவிகள் டூட்டி மாறும் நேரம் என்பதால் வெளியே செல்வதிலேயே குறியாக இருந்தனர். இதுபோன்ற நேரங்களில் வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: