200 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம்

அச்சத்தில் வியாபாரிகள், பொதுமக்கள்

மதுரை, ஜூன் 21:  மதுரை மாவட்டத்தில் ரூ.200 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மத்திய அரசு ரூ.ஆயிரம் மற்றும் ரூ.500 பழைய நோட்டுகளை தடை செய்து, ரூ.2ஆயிரம் மற்றும் ரூ.500, ரூ.200 என புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நோட்டுகள் அதிகளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் புழக்கத்தில் உள்ளன. இதில் அதிகமாக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வர்த்தகர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். மதுரை நகரில் பலசரக்கு கடை முதல் நகைக் கடை வரை கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது.

 பெரிய பெரிய கடைகளில் கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகளை வைத்து நோட்டுகளை தரம் பிரித்து விடுகின்றனர். ஆனால் சின்ன கடைகளில் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க முடியாமல் வாங்கி விடுகின்றனர். அது வங்கி உள்ளிட்ட இடங்களில் மாற்றும் போது, கள்ளநோட்டு என தெரிய வருகிறது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோட்டுகளை யார் மாற்றுவது என தெரியாமல் அவர்கள் காவல் நிலையங்களில் புகாரும் கொடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து கூறும்போது, ‘‘மதுரை நகரில் ரூ.2000 மற்றும் ரூ.500, ரூ200 என புதிய கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடுகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தில் தள்ளப்படுகின்றனர். பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க காவல்துறையினர் மற்றும் வங்கிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’, என்றார்.

Related Stories: