பெயரில் பட்டா இல்லாததால் ரூ.6 ஆயிரம் நிதி பெறுவதில் விவசாயிகளுக்கு திடீர் சிக்கல்

திருச்சி, ஜூன் 21: தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபாலிடம் ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணையாக வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தேர்தலுக்கு முன்னர் 3.66 கோடி விவசாயிகள், உதவி பெற தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு தமிழக விவசாயிகள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் தவணை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2ம் தவணையும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு நிதி உதவி கிடையாது என்ற உச்சவரம்பை நீக்கி 14.3 கோடி விவசாயிகளுக்கு வழங்க அரசாணை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 14.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 217 கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் 75 சதவீதம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அறியாமை காரணமாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவும் பட்டா மாறுதலுக்கான ஆவணங்களை அளித்த பின்பும் 1983 முதல் 2019 வரை பட்டா மாறுதல் முறையாக செய்து தரப்படவில்லை நிலத்தை விற்றவர் பெயரிலேயே பட்டா-சிட்டா உள்ளது.

எனவே விவசாயி பெயரில் பட்டா இருக்க வேண்டும். கணினியிலும் பெயர், சர்வே எண் சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிதி உதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழகம் முழுதும் 12,672 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் உடனடியாக நடத்தி தமிழக விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் பட்டா-சிட்டா வழங்க முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: