அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனர் குலசேகரத்தை சேர்ந்த மெக்கானிக் வெளிநாட்டில் படுகொலை தாயார், உறவினர்கள் கதறல்

குலசேகரம், ஜூன் 19:  குலசேகரம் அடுத்த மாத்தூர் குறக்குடி பகுதியை சேர்ந்தவர் பாபு (32). ஏ.சி. மெக்கானிக். இன்னும் திருமணமாகவில்லை. இவரது தந்தை இறந்துவிட்டார். தாய் ரெங்கபாய். உள்ளூரில் மெக்கானிக் தொழில் செய்து வந்த பாபுவுக்கு போதிய வருமானம் கிடைக்க வில்லை. இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவரின் உதவியுடன் ஓமன் நாட்டுக்கு ஏ.சி. மெக்கானிக் வேலைக்கு பாபு சென்றார். அருளும், ஓமனில் தான் பணியாற்றி வருகிறார். வெளிநாடு சென்ற பின்னர், இதுவரை பாபு, ஊருக்கு வர வில்லை. மாதந்தோறும் ஊரில் உள்ள தனது தாயார் ரெங்கபாயின் செலவுக்கு மட்டும் பணம் அனுப்பி வைத்தார். மீதி பணத்தை தனது சேமிப்பில் வைத்திருப்பதாக கூறினார்.

ஓமனில் உள்ள சலாலா மாவட்டத்தில் தான் பாபு பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பாபு தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.  அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. முதலில் இறந்தவர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் இது பற்றிய விவரங்களை சேகரித்த போலீசார், பாபுவின் பாதுகாவலர் என்ற முறையில் அருளை வரவழைத்து விசாரணை நடத்தினர். பாபு பணியாற்றும் இடத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் தான் அருள் பணியாற்றி வருகிறார். அருள் வந்த பின்னர் தான் இறந்தது பாபு என்பதை போலீசார் உறுதிப்படுத்தி, பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்துள்ளனர். பாபு கொலை செய்யப்பட்டதை அங்குள்ள காவல் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் கொலைக்கான காரணம்  கூறப்பட வில்லை.

பாபு அதிகளவில் பணம் வைத்துள்ளார். ஊருக்கு திரும்பி வந்ததும், வீடு கட்ட வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு தனது சித்தப்பா ஒருவரிடமும் போனில் தகவல் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாபு கொலை செய்யப்பட்டதாக கூறப் படுவதால் பணத்துக்காக இந்த கொலை நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாபு பணியாற்றி வந்த இடத்தில் வட இந்தியாவை  சேர்ந்த வாலிபர்கள் சிலரும் பணியாற்றி உள்ளனர். அவர்களிடமும் போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன், பாபுவுடன் பணியாற்றிய திருவட்டார்  பூவன்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊருக்கு கிளம்பும் போது, பாபுவையும் அழைத்துள்ளார். ஆனால் விசா இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்பதால், விசாவை புதுப்பித்துக் கொண்டு ஊருக்கு  வருவதாக பாபு கூறி உள்ளார். இந்த நிலையில் அவரது மரணம் ஊரில் உள்ள உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடலை கொண்டு வர உதவ வேண்டும்

பாபுவின் கொலை குறித்த உண்மையை கண்டறிய மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாபுவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாபுவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாபுவின் மரணம் அவரது தாயார் ரெங்கபாயை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மகன் இறந்த தகவலை கேட்டதும், யாரும் இல்லாத அனாதையாகி விட்டேனே. என் பிள்ளையின் முகத்தை கூட பார்க்க முடிய வில்லையே என கூறி அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Stories: