சோழவரத்தில் நீரின்றி வறண்ட செம்பியமணலி ஏரியை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

புழல், ஜூன் 13: சோழவரம் அருகே நீரின்றி வறண்ட செம்பியமணலி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும், விவசாயம் செழிக்க மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும் பொதுப்பணித்தறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பியமணலி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி பாசனத்தால்  அம்மன்குளம், அம்மன்தாங்கல், விச்சூர், வெல்லாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயம் செய்து வந்தனர். மேலும் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டதால் சுற்றுப்புற கிராமக்களும் பயன் அடைந்து வந்தனர்.

சில வருடங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியதால் ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் சிக்கி வீட்டுமனைகளானது. அது மட்டுமின்றி ஏரிக்கரையை உடைத்து  வீட்டுமனைகளாக பிரித்து விற்றுவிட்டனர். இதன் பலனாக ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. ஏரி பாசனத்தை நம்பியிருந்த விவசாய நிலம் தரிசு நிலமானது. கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததால் நீர்வரத்து இன்றி ஏரி வறண்டது. தற்போது புல், கருவேலமரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் குடிநீருக்காக மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்

எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஏரியை வீட்டுமனைகளாக பிரித்து விற்க  முயற்சிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செழிக்கும். நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும் அதே நேரத்தில் குடிநீருக்காக திண்டாடும் அவலம் இருக்காது. புல் பூண்டுகள் வளர்ந்து கால் நடைகளுக்கு போதுமான மேய்ச்சல் கிடைக்கும். இந்த ஏரியை தூர்வாரி சீரமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்வதோடு, விவசாயமும் செழிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: