கோயில் கட்டுவதற்கு அதிகாரிகள் மறுப்பு பேச்சு வார்த்தைக்கு வந்த வட்டாட்சியர் முற்றுகை

செய்யூர், ஜூன் 12: பவுஞ்சூர் அருகே மேயக்கால் புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், பேச்சு வார்த்தைக்கு வந்த வட்டாட்சியரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், செய்யூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இலத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டரை ஊராட்சியின் எல்லை பகுதியில் கல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிகரை பகுதியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தண்டரை, செம்பூர், மடவிளாகம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், ஏரிக்கரையை பலப்படுத்துவதற்காக கோயிலின் படிகளை பொதுப் பணித்துறையினர் சேதப்படுத்தினர். இதனால், பக்தர்கள் ஏரிக்கரை மேல் ஏறுவதற்கு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இக்கோயிலை ஏரிகரையின் கீழ்பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். பின்னர், அந்த பகுதியில் மண்ணை நிரவி கோயில் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த வருவாய் துறையினர், அப்பகுதியில் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க மறுத்தனர். இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், செய்யூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், மேற்கண்ட கிராமத்துக்கு சென்றனர். அப்போது, பழங்கால கோயில் அமைந்துள்ள இடம், பொதுமக்கள் தற்போது கோயில் அமைக்க உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள், ஏரிக்கரையின் மீது உள்ள கோயிலை, மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் கட்டுவதற்கு அனுமதி கேட்டனர். அதற்கு, வட்டாட்சியர் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வட்டாட்சியரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். அவரிடம், காலம் காலமாக வணங்கி வரும் கோயிலை, புதிய இடத்தில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின், வட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, பிரச்னைக்கான உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: